அத்தியாயம் 44
சாக்கிலே வெள்ளிப் பாத்திரம்
1 பின்பு, அவன் தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ இந்த மனிதர்களுடைய சாக்குகளை அவர்கள் ஏற்றிக்கொண்டுபோகத்தக்க பாரமாகத் தானியத்தினாலே நிரப்பி, அவனவன் பணத்தை அவனவன் சாக்கிலே போட்டு,
2 இளையவனுடைய சாக்கிலே வெள்ளிப் பாத்திரமாகிய என் பானபாத்திரத்தையும் தானியத்திற்கு அவன் கொடுத்த பணத்தையும் போடு” என்று கட்டளையிட்டான்; யோசேப்பு சொன்னபடியே அவன் செய்தான்.
3 அதிகாலையிலே அந்த மனிதர்கள் தங்கள் கழுதைகளை ஓட்டிக்கொண்டுபோகும்படி அனுப்பிவிடப்பட்டார்கள்.
4 அவர்கள் பட்டணத்தைவிட்டுப் புறப்பட்டு, வெகுதூரம் போவதற்கு முன்னே, யோசேப்பு தன் வீட்டு விசாரணைக்காரனை நோக்கி: “நீ புறப்பட்டுப்போய், அந்த மனிதர்களைப் பின்தொடர்ந்து, அவர்களைப் பிடித்து: நீங்கள் நன்மைக்குத் தீமை செய்தது என்ன?
5 அது என் எஜமான் பானம்பண்ணுகிற பாத்திரம் அல்லவா? அது போனவிதம் ஞானபார்வையினால் அவருக்குத் தெரியாதா? நீங்கள் செய்தது தகாதகாரியம் என்று அவர்களிடம் சொல்” என்றான்.
6 அவன் அவர்களைத் தொடர்ந்து பிடித்து, தன்னிடத்தில் சொல்லியிருந்த வார்த்தைகளை அவர்களுக்குச் சொன்னான்.
7 அதற்கு அவர்கள்: “எங்கள் ஆண்டவன் இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்லுகிறது என்ன? இப்படிப்பட்ட காரியத்திற்கும் உம்முடைய அடியாராகிய எங்களுக்கும் வெகுதூரம்.
8 எங்களுடைய சாக்குகளிலே நாங்கள் கண்ட பணத்தைக் கானான்தேசத்திலிருந்து திரும்பவும் உம்மிடத்திற்குக் கொண்டுவந்தோமே; நாங்கள் உம்முடைய எஜமானின் வீட்டிலிருந்து வெள்ளியையாகிலும், பொன்னையாகிலும் திருடிக்கொண்டு போவோமா?
9 உம்முடைய அடியாருக்குள்ளே அது எவனிடத்தில் காணப்படுமோ அவன் கொலை செய்யப்படுவானாக; நாங்களும் எங்கள் ஆண்டவனுக்கு அடிமைகளாவோம்” என்றார்கள்.
10 அதற்கு அவன்: “நீங்கள் சொன்னபடியே ஆகட்டும்; எவனிடத்தில் அது காணப்படுமோ, அவன் எனக்கு அடிமையாவான்; நீங்கள் குற்றமில்லாதிருப்பீர்கள்” என்றான்.
11 அப்பொழுது அவர்கள் வேகமாக அவனவன் தன்தன் சாக்கைத் தரையிலே இறக்கி, தங்கள் சாக்குகளைத் திறந்து வைத்தார்கள்.
12 மூத்தவன் சாக்குமுதல் இளையவன் சாக்குவரை அவன் சோதிக்கும்போது, அந்தப் பாத்திரம் பென்யமீனுடைய சாக்கிலே கண்டுபிடிக்கப்பட்டது.
13 அப்பொழுது அவர்கள் தங்கள் உடைகளைக் கிழித்துக்கொண்டு, அவனவன் கழுதையின்மேல் மூட்டையை ஏற்றிக்கொண்டு, பட்டணத்திற்குத் திரும்பினார்கள்.
14 யூதாவும் அவனுடைய சகோதரர்களும் யோசேப்பின் வீட்டிற்குப் போனார்கள். யோசேப்பு அதுவரைக்கும் அங்கே இருந்தான்; அவனுக்கு முன்பாகத் தரையிலே விழுந்தார்கள்.
15 யோசேப்பு அவர்களை நோக்கி: “நீங்கள் என்ன காரியம் செய்தீர்கள்? என்னைப் போன்ற மனிதனுக்கு ஞானப்பார்வையினால் காரியம் தெரியவரும் என்று அறியாமற்போனீர்களா” என்றான்.
16 அதற்கு யூதா: “என் ஆண்டவனாகிய உம்மிடத்தில் நாங்கள் என்ன சொல்லுவோம்? எதைப் பேசுவோம்? எதினாலே எங்களுடைய நீதியை விளங்கச்செய்வோம்? உம்முடைய அடியாரின் அக்கிரமத்தை தேவன் விளங்கச்செய்தார்; பாத்திரத்தை வைத்திருக்கிறவனும் நாங்களும் என் ஆண்டவனுக்கு அடிமைகள்” என்றான்.
17 அதற்கு அவன்: “அப்படிப்பட்ட செயல் எனக்குத் தூரமாயிருப்பதாக; யாரிடத்தில் பாத்திரம் கண்டுபிடிக்கப்பட்டதோ, அவனே எனக்கு அடிமையாயிருப்பான்; நீங்களோ சமாதானத்தோடு உங்கள் தகப்பனிடத்திற்குப் போங்கள்” என்றான்.
யூதா, யோசேப்பினிடத்தில் தாழ்மையாக வேண்டிக்கொண்டது
18 அப்பொழுது யூதா அவனருகில் வந்து: “ஆ, என் ஆண்டவனே, உமது அடியேன் உம்முடைய செவிகள் கேட்க ஒரு வார்த்தை சொல்லுகிறேன் கேட்பீராக; அடியேன்மேல் உமது கோபம் வராதிருப்பதாக; நீர் பார்வோனுக்கு ஒப்பாயிருக்கிறீர்.
19 உங்களுக்குத் தகப்பனாவது சகோதரனாவது உண்டா என்று என் ஆண்டவன் உம்முடைய அடியாரிடத்தில் கேட்டீர்.
20 அதற்கு நாங்கள்: எங்களுக்கு முதிர்வயதுள்ள தகப்பனாரும், அவருக்கு முதிர்வயதிலே பிறந்த ஒரு இளைஞனும் உண்டு என்றும், அவனுடைய அண்ணன் இறந்துபோனான் என்றும், அவன் ஒருவன்மாத்திரமே அவனைப்பெற்ற தாயாருக்கு இருப்பதால் தகப்பனார் அவன்மேல் பாசமாயிருக்கிறார் என்றும் என் ஆண்டவனுக்குச் சொன்னோம்.
21 அப்பொழுது நீர்: அவனை என்னிடத்திற்குக் கொண்டுவாருங்கள்; என் கண்களினால் அவனைப் பார்க்கவேண்டும் என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
22 நாங்கள் ஆண்டவனை நோக்கி: அந்த இளைஞன் தன் தகப்பனைவிட்டுப் பிரியக்கூடாது, பிரிந்தால் அவர் இறந்துபோவார் என்று சொன்னோம்.
23 அதற்கு நீர்: உங்கள் இளைய சகோதரனைக் கொண்டுவராவிட்டால், நீங்கள் இனி என் முகத்தைக் காண்பதில்லை என்று உமது அடியாருக்குச் சொன்னீர்.
24 நாங்கள் உமது அடியானாகிய என் தகப்பனாரிடத்திற்குப் போனபோது, என் ஆண்டவனுடைய வார்த்தைகளை அவருக்குத் தெரிவித்தோம்.
25 எங்களுடைய தகப்பனார் எங்களை நோக்கி: நீங்கள் திரும்பப்போய், நமக்குக் கொஞ்சம் தானியம் வாங்குங்கள் என்று சொன்னார்.
26 அதற்கு: நாங்கள் போகக்கூடாது; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வந்தால் போவோம்; எங்கள் இளைய சகோதரன் எங்களோடு வராவிட்டால், நாங்கள் அந்த மனிதனுடைய முகத்தைக் காணமுடியாது என்றோம்.
27 அப்பொழுது உம்முடைய அடியானாகிய என் தகப்பனார்: என் மனைவி எனக்கு இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள்;
28 அவர்களில் ஒருவன் என்னிடத்திலிருந்து போய்விட்டான், அவன் கிழிக்கப்பட்டிருப்பான் என்றிருந்தேன், இதுவரைக்கும் அவனைக் காணாதிருக்கிறேன், இதெல்லாம் நீங்கள் அறிந்திருக்கிறீர்கள்.
29 நீங்கள் இவனையும் என்னை விட்டுப்பிரித்து அழைத்துப்போகுமிடத்தில் இவனுக்குத் தீங்கு நேரிட்டால், என் நரைமுடியை வியாகுலத்தோடு பாதாளத்தில் இறங்கச் செய்வீர்கள் என்றார்.
30 ஆகையால் இளையவனைவிட்டு, நான் என் தகப்பனாகிய உமது அடியானிடத்திற்குப் போனால், அவருடைய ஜீவன் இவனுடைய ஜீவனோடு ஒன்றாக இணைந்திருப்பதால்,
31 அவர் இளையவன் வரவில்லை என்று அறிந்தமாத்திரத்தில் இறந்துபோவார்; இப்படி உமது அடியாராகிய நாங்கள் உமது அடியானாகிய எங்கள் தகப்பனுடைய நரைமுடியை மனதுக்கத்துடனே பாதாளத்தில் இறங்கச்செய்வோம்.
32 இந்த இளையவனுக்காக உமது அடியானாகிய நான் என் தகப்பனுக்கு உத்திரவாதி; மேலும், நான் இவனை உம்மிடத்திற்குக் கொண்டுவராவிட்டால், நான் எந்நாளும் உமக்கு முன்பாகக் குற்றவாளியாயிருப்பேன் என்று அவருக்குச் சொல்லியிருக்கிறேன்.
33 இப்படியிருக்க, இளையவன் தன் சகோதரர்களோடுகூடப் போகவிடும்படி மன்றாடுகிறேன்; உம்முடைய அடியானாகிய நான் இளையவனுக்குப் பதிலாக இங்கே என் ஆண்டவனுக்கு அடிமையாக இருக்கிறேன்.
34 இளையவனைவிட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்குப் போவேன்? போனால் என் தகப்பனுக்கு நேரிடும் தீங்கை நான் எப்படிக் காண்பேன்” என்றான்.